நடப்பவை யாவும் மனதின் நினைப்புகளே...

தோல்வி
என்றாவது, எதற்காவது, எப்போதாவது நம்மை தீண்டாமல் விடுவதில்லை.  தோல்வியும் ஒரு சக்தி தான். அது தரும் நம்பிக்கை அபரிதமானது. அதை உணர்ந்தவர்கள் அனைவரும் இன்றைய சாதனையாளர்கள்.


தோல்வியை கண்டு பயந்து, துவந்து, தோய்ந்து போனவர்களுக்கு இந்த பதிவு ஒரு நம்பிக்கையை தரும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

கொஞ்சம் நினையுங்கள்....
காத்திருந்து, புரண்டு, தவழ்ந்துதானே முயற்சித்தோம் முதலடிக்கு...
தடுமாறி விழ விழ, அடிகள் பட்டுப் பட்டுத்தானே கற்றுகொண்டோம் மிதிவண்டியை...
அறியாத போதே நமக்குள்ளிருந்த முயற்சி...
இப்போது மட்டும் நமக்குவரலாமோ அயர்ச்சி...

ஓட்டப்பந்தயத்தில் கூட, முதலில் வந்தவனை விட்டு மூன்றாமிடத்தில் வந்தவனுக்குதான் முதலில் பரிசு வழங்கப்படுகிறது!

வெறும் பார்வையாளனாக நின்று வேடிக்கைப் பார்ப்பதை விட, போட்டியிட்டுத் தோற்பது பன்மடங்கு உயர்வென்று நினையுங்கள்!


வீழ்வது தோல்வியென்று யார் சொன்னது நண்பா?
வீழ்ந்த நீ  திரும்ப எழுந்து விடாமல் இருப்பதே பெருந்தோல்வி!

புலியின் பதுங்கல், பாய்ச்சலுக்கு தான், பயத்தினால் அல்ல!
உன் தோல்வியும் கூட வெற்றிக்கான பாய்ச்சலாகவே இருக்கட்டும்!


வெற்றியா? தோல்வியா? என்பதல்ல வாதம்;
ஆடுகளத்தில் நீ இருக்கிறாயா என்பதை மட்டும் அடிக்கடி உறுதிபடுத்திக்கொள்!

வெற்றியைக் கொண்டாட எவராலும் இயலும்;
தோல்வியை ஏற்றுத் துவளாதிருக்க ஒரு சிலரால் மட்டுமே முடியும்!

அந்தச் சிலரில் ஒருவனாக நீ இருந்தால், வெற்றிக்கோப்பை விரைவிலேயே உன் கையில் கிட்டும்; வெற்றிமுழக்கம் உன் வீட்டுக்கதவைத் தட்டும்!

உனக்குள் நீ தோற்காதவரை உன்னோடு நீ தோற்காதவரை,
தோல்வி என்பது ஒரு கானல் நீரே..

வெற்றி அடந்தவனின், அவர்களின் வெற்றியின் ரகசியத்தை கேட்பதைவிட, தோல்வி அடைந்தவனிடம் அவனின் அனுபவத்தை கேள்.

தோல்விக்கான காரணங்களை கண்டுபிடித்து 'களை' எடுத்து வெற்றியின் விதைகளை வளர்ப்பது நம் கையில் தான் உள்ளது.

சுருக்கமாக கூறினால்...
நம்முடைய வாழ்க்கையாகட்டும், நம்முடைய ஆரோக்கியமாகட்டும், செல்வமாகட்டும், உணர்வுகளாகட்டும் எல்லாவற்றிக்கும் நாமே பொறுப்பு. இதை நாம் உணர்ந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு, உறுதியாக நம்பினால், நாம் வெற்றிப் பாதையில் காலடி வைக்கிறோம். இந்த அடிப்படையான உண்மையை நாம் ஏற்க மறுத்தால், முடியும் என்றால் முடியும், முடியாது என்றால் முடியாது,
நடப்பவை யாவும் மனதின் நினைப்புகளே...
வெற்றி என்பது நமது தேர்ந்தெடுப்பே...

வெற்றியைத் தலைக்கு மேலே எடுத்துக் கொள்ளவும் வேண்டாம். தோல்வியை மனதுக்குள் எடுத்துக் கொள்ளவும் வேண்டாம்....

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...