போர்!

இந்த வேகாத வெய்யிலில்
விரும்பியாடா போராடுகிறோம்?

கர்நாடகாவில்
தமிழ்நாட்டில்
ஆந்திராவில்
ஆட்சியைப்
பிடிக்கவேண்டியாடா
போராடுகிறோம்?

ஊரையடித்து
உலையில் போட்டு
லெக் பீஸ் சுவைக்கவாடா
போராடுகிறோம்?

மின்விசிறியைச் சுழலவிட்டு
சூப்பர் சிங்கர் பார்க்க
ஆசையில்லாமலாடா
போராடுகிறோம்?

கோடைவிடுமுறையில்
ஊட்டி கொடைக்கானல் போய்
வெக்கையழிக்க
விருப்பமின்றியாடா
போராடுகிறோம்?

இரும்புத்திரை
பாஸ்கர் ஒரு ராஸ்கல்
நடிகையர் திலகம்
ரிலீஸ் படங்கள் பார்த்து
விசிலடிக்க தோணாமலாடா
போராடுகிறோம்?

போராடினால்
புறநானூற்று வீரமெனப்
பரிசும் பதக்கமும்
தருவீர்களென்றாடா
போராடுகிறோம்?

குடிக்கும் தண்ணீரில்
துத்தநாகம்
நாற்று நடும் வயல்களில்
தாமிரக்கழிவுகள்

ஒரு ஆலை எங்கள்
இதயத்தில்
இரைப்பையில்
நுரையீரலில்
புற்றைக் கொண்டு
வந்திருக்கிறது!


அடேய்!
அமைதிப் பூங்காவைத்
துப்பாக்கியால்
பாதுகாக்கிறவர்களே

எங்கள் தங்கை
இரவெல்லாம் இருமலோடு
தூங்கச் சிரமப்படுகிறாள்
அப்பனுக்கோ தீராத ஆஸ்த்துமா
அம்மா கேன்சரில்
செத்தே போய்விட்டாள்.

சொந்தங்களோடு
உழைத்து உண்டு உறங்கி
நிம்மதியாக வாழவேண்டிதானே
போராடுகிறோம்!

போராடினால்
அதிகமென்ன செய்வீர்கள்
ஜெயிலில்
போடுவீர்களென்றுதானே
நினைத்தோம்!

வாக்குக்கு தொழுத கையுள் படையொடுங்குமென
நினைத்தோமா?

எங்கள் அண்ணனைக்
கொன்றிருக்கீன்றீர்கள்
அப்பனைக்
கொன்றிருக்கின்றீர்கள்
பெற்ற அன்னையைக்
கொன்றிருக்கின்றீர்கள்

எந்த வாஷிங்பவுடர் கொண்டு
உங்கள் மினிஸ்டர் காட்டன்
ரத்தக்கறையை கழுவுவீர்கள்?

கார்ப்ரேட்களுக்கு
கால் கழுவும் பாவிகளா
கறை நல்லதாடா?

சனநாயமென்பது
ஏழைகளின்
பிணநாயகமாடா?
நாய்களே!

அடேய்.. அடேய்!
படிக்கப்போகும்
எங்கள் தங்கை
வெனிஸ்டாவைக்
கொன்றீர்களே!

நாளை..

எங்கள் மாணவர்கள்
கைகளில்
புத்தகமிருக்குமா?
துப்பாக்கியிருக்குமா?

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...